தற்போது இந்தியைத் திணிக்க விரும்பும் ஆட்சியாளர்கள் கால மாற்றத்தைக் கவணிக்கத் தவறுகிறார்கள். எண்பது ஆண்டுகளுக்கு முந்தையச் சூழல் தற்போது இல்லை. உலகமயமாக்கலுக்குப் பிறகு இந்தி என்னும் குதிரையைக் கொண்டு இந்தியக் குண்டுச்சட்டிக்குள் கூடக் குதிரை ஓட்ட முடியாது என்பதை தமிழகத்தில் கூலி வேலை செய்யும் இந்தி பேசும் வட இந்தியச் சகோதரன் எங்களுக்குக் காட்டிக் கொண்டிருக்கிறான்.
கூடுதலாக கணினி முதல் அலைப்பேசி வரை தமிழ் தெரியுமா எழுத முடியுமா எனப் பார்த்து வாங்கும் காலம் இது. சமூக வலைத்தளங்கள் கூட அந்தப்பகுதி மொழிகளில் இடைமுகப்பை வழங்கிக்கொண்டிருக்கின்றன. ஆட்சியாளர்களை ஆட்டி வைக்கும் கயிற்றை கையில் வைத்துக் கொண்டிருக்கும் பண்ணாட்டு/உள்நாட்டு நிறுவனங்கள் கூட தங்கள் பொருட்களைச் சந்தைப்படுத்த அந்தந்த பகுதிகளின் மொழியைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் ஒரு தேசத்துக்கு ஒற்றை மொழி என்ற நூறு வயதான ஐரோப்பியச் சிந்தனை முறை ஒத்து வராது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். — இந்நிலையில் தமிழகத்தில் கடந்த எண்பது ஆண்டுகளாக நடந்த/நடைபெற்றுவரும் இந்தி திணிப்பு முயற்சிகளும் அதற்கெதிராக இங்கு நடந்த மொழிப்போரையும் சுருக்கமாகச் சொல்லும் நூல் கிழக்குப் பதிப்பக வெளியீடான ஆர்.முத்துக்குமார் எழுதிய “மொழிப்போர்” எனும் நூல். இந்தி எதிர்ப்புப் போர் இரண்டு முறை மட்டுமே நடைபெற்றதாக ஒரு மயக்கம் இங்கு பலருக்கும் ஏற்படுமாறு வரலாறு கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், உண்மை அதுவல்ல தொடர்ச்சியாக இந்தி திணிப்பு இங்கு நடைபெற்று வருவதையும் அதற்கான எதிர்வினைகளும் தொடர்ச்சியானது என்பதை இந்நூல் பதிவு செய்கிறது. — சில தினங்கள் முன்பு புதிய தலைமுறைத் தொலைக்காட்சியில் அகில இந்திய வானொலியில் இந்தி ஒலிபரப்புத் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் பாரதீய ஜனதாவைச் சேர்ந்த நபர் ஒருவர் ‘தமிழகத்தில் மத்திய அரசு விளம்பரங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுத் தான் வெளியாகின்றன’ என்றார். எனது புரிதலின்படி அவர் பங்குபெற்ற நிகழ்ச்சிகளைக் கூட அவர் தொலைக்காட்சியில் பார்க்கும் வழக்கம் இல்லாதவராகவும் செய்தித்தாள்கள் பார்க்காதவராகவும் இருப்பார். அதே நிகழ்ச்சியின் விளம்பர இடைவெளிகளில் “சூச்சு பாரத்” என்ற விளம்பரம் முழுக்க இந்தியில் ஒளிபரப்பாகிறது. (இந்த வார்த்தையை நான் தட்டச்சிக் கொண்டிருக்கும் இந்த நொடியிலும் இந்தியில்தான் இந்த விளம்பரம் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.) இதை அந்நிகழ்ச்சியின் நெறியாளர் ஜென்ராம் எடுத்துக் கூறிக் கேள்வி கேட்கும் போது, நான் பார்த்ததில்லை முன்பு வெளியாகியிருக்கும் என்றார். மழுப்பல். இதேநிகழ்ச்சிதான் என்பது ஆண்டுகளாக வெவ்வேறு நபர்களால் வெவ்வேறு காலகாட்டங்களில் நடைபெற்று வருகிறது. இந்தியைத் திணிப்பார்கள். ஆவேசமாய் இதுதான் உறுதி என்பார்கள். எதிர்ப்பு வலுக்கும். அடக்கப் பார்ப்பார்கள். முடியாது. மழுப்புவார்கள். பின் வாங்குவார்கள். இது ஒரு சுழற்ச்சியாக மீண்டும் மீண்டும் நடந்து கொண்டிருக்கிறது. இப்படி 1930களில் இருந்து 2000 ஆண்டுகளுக்கு முன்பு வரை இங்கு நடைபெற்ற இந்தித் திணிப்பு முயற்சிகளையும், அதற்குத் தமிழகத்தில் நிகழ்த்தப்பட்ட எதிர்வினைகளையும் ஏழு கட்டங்களாகப் பிரித்து ஒவ்வொரு கட்டத்தைப் பற்றியும் அலசி இருக்கிறார் நூல் ஆசிரியர். ஒவ்வொரு கட்டப் போராட்டமும் “இந்தித் திணிப்பு முயற்சி – அதற்கான நடவடிக்கைகள் – அதற்கு எதிரானப் போராட்டங்கள் – போராட்டத் தலைவர்கள், அவர்களது நடவடிக்கைகள் – எதிரணியிலிருந்த தலைவர்கள், அவர்களது ஆதிக்கப் பேச்சுகள் – போராட்டங்கள் வலுப்பது – எதிரணியிலிருந்து மழுப்பல், பின்வாங்கல்” இந்தச் சுழற்சியிலேயே மீண்டும் மீண்டும் நடைபெறுகிறது என்பதை இந்நூலை நாம் படிக்கும் போது உணர்ந்துகொள்ளலாம். சமீபத்திய நடவடிக்கைகளும் இதே சுழற்சியில் நடைபெற்றுக் கொண்டிருப்பதைப் பொருத்திப் பார்க்கலாம். — ஆட்சியதிகாரத்தின் மையப்பகுதியாக விளங்கும் டெல்லியைச் சுற்றிப் பேசப்படும் இந்தியின் கிளைமொழிகளில் ஒன்றான ‘கரி போலி/கடி போலி’ என்னும் மொழியையே உயர்த்திப் பிடிக்க இந்திய அரசு முனைவதையும், இந்த வழக்கிலான மொழியைப் பேசும் மக்கள் தொகை இரண்டு சதவிகிதமே (இன்றளவும் இந்த சதவிகிதம் கூடவில்லை) என்பதை இந்நூல் பதிவு செய்திருக்கிறது. அலுவல் மொழி பற்றிய நாடாளுமன்ற விவாதங்களில் சிலவற்றையும் கட்டாய இந்தித் திணிப்பை எதிர்க்கும் தரப்பினரின் வாதங்கள் பலவற்றையும் இந்நூல் பதிவு செய்திருக்கிறது. இந்தக் காரணங்கள் இன்றளவும் இப்படியே இருப்பது கண்கூடு. — மத்திய அரசின் இந்தி திணிப்பு முயற்சிகளுக்கு இந்தி பேசாத பிற மாநிலங்களில் எதிர்ப்பு இருந்ததை அடிக்கடி குறிப்பிடுகிறார் நூல் ஆசிரியர். இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் தமிழகத் தலைவர்கள் கைது செய்யப்பட்டுத் தண்டிக்கப்படுவதற்கு ஜின்னா, தாகூர் போன்றோர் எதிர்ப்பு தெரிவித்ததையும் பதிவு செய்திருக்கிறார். அதேபோல இந்தி திணிப்புகள் பற்றி நாடாளுமன்ற கூட்டங்களில் நடைபெற்ற விவாதங்களில் தமிழரல்லாத இந்தி எதிர்ப்பு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பேசிய பேச்சுகளையும் ஆங்காங்கே தந்திருக்கிறார். ஆனால், தமிழகம் தவிர்த்து இந்தித் திணிப்பை எதிர்த்த பிற மாநிலத்தில் நடைபெற்றப் போராட்டங்களையும் எதிர்ப்புகளையும் தனியே ஒரு அத்தியாயத்தில் தொகுத்திருந்தால் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்கள் இந்தியாவில் பல பகுதிகளிலும் நடைபெற்றது என்பதை உணர்த்தியிருக்கலாம். (நூல் ஆசிரியர் ‘இந்தித் திணிப்புக்கு எதிராகத் தமிழகம் திரண்ட வரலாறு’ என்று நூலின் நோக்கத்தைத் தெளிவுபடுத்தியிருந்தாலும், இப்படி ஒரு அத்தியாயத்தைச் சேர்ப்பதில் பழுதில்லை.) — நான்காம் கட்ட இந்தி எதிர்ப்புப் போரின் போது பெரியார் ஏன் எதிர் நிலையை எடுத்தார் என்பதை ஒரே ஒரு பத்தியில் கடந்து சென்று விடுகிறார். அதே போல அண்ணா போராட்டத் தலைவர்களை போராட்டத்தை நிறுத்த அறிவுறுத்தியதையும், ராஜாஜி போராட்டத்துக்கு ஆதரவு அளித்ததையும் கூட ஒரு சில பத்திகளில் கடந்துவிடுகிறார் நூலாசிரியர். இந்த மூன்று பேரின் நிலை மாற்றங்கள் குறித்து இன்னும் விரிவாகப் பேசியிருந்தால் மொழிப்போர் குறித்து தெரிந்து கொள்ள விரும்பும் இளைஞர்களுக்கு அது சரியானப் பார்வையைக் கொடுத்திருக்கும். — பொதுவாகக் கிழக்குப் பதிப்பகப் புத்தகங்களில் மற்ற தமிழ்ப்பதிப்பகப் புத்தகங்களின் காணப்படும் எழுத்துப் பிழைகளின் அளவை விட குறைவாகவே இருக்கும். ஆனால், இந்தப் புத்தகத்தில் சில எழுத்துப் பிழைகள் மீண்டும் மீண்டும் செய்யப்பட்டிருப்பது கண்ணைக் கொஞ்சம் அதிகமாகவே உறுத்துகிறது. கள்ளக்குறிச்சி என்ற ஊரின் பெயர் கல்லக்குறிச்சி என்றும், கல்லக்குடி-கள்ளக்குடி என்று மாறி மாறியும் அச்சடிக்கப்பட்டிருக்கிறது. இதுபோன்ற எழுத்துப்பிழைகளைக் கூட இன்றையத் தமிழ்ப் பதிப்புச் சூழலில் வெளிவரும் எழுத்துப்பிழைகளோடு ஒப்பிட்டு ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், அடுத்த பிழை மண்ணிக்கவே முடியாதது. அது, ‘தாளமுத்து’வின் பெயர் பல இடங்களில், அத்தியாயத் தலைப்பு உட்பட ‘தாலமுத்து’ என்றே அச்சிடப்பட்டிருக்கிறது. மொழிப்போர் வரலாற்றை மாணவர்களுக்கு எடுத்துச் சொல்ல இந்நூலை அறிமுகக் கையேடாகப் பயன்படுத்தலாம்.

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License