• Home
  • About
    • Thamiziniyan photo

      Thamiziniyan

      INTP-LOGICIAN, Journalist, Social Media Editor, Few BOTS, Inactive WordPress developer, Bibliophile, Coffee Addict. now @vikatan views are personal.

    • Learn More
    • Twitter
    • Facebook
    • Instagram
    • Github
  • Posts
    • All Posts
    • All Tags
  • Tags

சோளகர் தொட்டி

04 Apr 2012

Reading time ~4 minutes

சமீப காலத்தில் அதிக கனத்தோடு கையில் சுமந்து படிந்த புத்தகம் இந்த சோளகர் தொட்டி. கையிலிருந்த கனம் மனதில் ஏறி படிக்கமுடியாமல் இடையில் நிறுத்தி நிறுத்தி படித்த புத்தகம்.

இந்த அரசமைப்பு, அதிகாரத்தின் மீது கொன்டிருக்கிற தீராக்காதலால், அதற்கு பங்கம் ஏற்படும் போதெல்லாம் அடக்குமுறையைக் கையாள ஒரு போதும் தவறுவதில்லை. அடக்குமுறைக்கு உள்ளாகும் மக்கள் அந்த நாட்டின் சொந்தக் குடிகளா இல்லையா என்பதைப் பற்றியெல்லாம் அதற்கு அக்கறையில்லை. இதுவரை மனித குலம் கண்ட எல்லா அரசாட்சி முறைகளிலும் அரசு என்கிற இயந்திரம் அடக்குமுறையை தனது பிரதான கருவியாகவே பயன்படுத்தி வந்ததை வரலாறு நமக்கு சொல்கிறது. பண்டைய ரோம அரசாட்சியிலிருந்து இன்றைய கூடங்குளம் வரை, ஒவ்வொரு நிகழ்வையும் இதற்கு சான்றாய் பதிவுசெய்து பதிவுசெய்து நீட்சியடைந்த பெருத்த புத்தகமாய் இன்று உருவடைந்து நிற்கிறது. அப்படி, நம் கண்ணுக்கெட்டிய தூரத்தில் சில பத்தாண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்வை பதிவு செய்கிறது சோளகர் தொட்டி என்னும் நாவல்.

அரச வன்முறையை வரலாற்றில் பதிவு செய்த எல்லா புத்தகங்களோடு இதையும் ஒன்றாய் அடக்கி விடமுடியாதபடிக்கு இப்படைப்பை எடுத்துச் செல்வது சோளகர் தொட்டி பதிவு செய்திருக்கும் மக்களும், அவர்களின் வாழ்க்கையும் தான்.

நம்மால் அதிகம் தெரிந்து கொள்ளப்படாத, நம்மால் புரிந்து கொள்ளமுடியாத இயற்கையோடு உறவு கொண்ட, நம்மிலிருந்து வித்தியாசப்பட்ட புவியியல் அமைப்பையும், வாழ்வியல் முறைகளையும் கொண்ட பழங்குடி மக்களின் கலாச்சாரத்தை, அவர்கள் வாழ்வியலை பதிவு செய்வதோடு, அவர்கள் அரச வன்முறையில் சிக்கிச் சீரழிந்த ஒரு துயர வரலாற்றையும் இந்நாவல் பதிவு செய்கிறது.

நாவலின் முன்பகுதி சோளகர்களின் (ஒரு பழங்குடிக் குலம்) மண்ணை, அவர்களின் சாமிகளை, சடங்குகளை, தொன்மங்களை, திருமன உறவுகளை, விதவைகளின் நிலையை, கொத்தல்லி, கோல்காரன் போன்ற அவர்களின் சமூக அமைப்பை, விவசாய முறையை, அவர்களின் இசைக்கருவிகளை, இசையையெல்லாம் கஞ்சாப் புகை திரண்டு நமக்கு நெடியேற்றும் படி பதிவு செய்திருக்கிறார். கஞ்சா வாடையின் சூழலில் கொஞ்சம் கொஞ்சமாக ரத்த வாடை கலந்து, சோளகர்களின் தொட்டியெங்கும் கண்ணீரோடு ரத்த வாடை காற்றில் மிதக்கிறது. முதல் பாகம் முழுதும் கஞ்சா வாடை என்றால், இரண்டாம் பாகத்தில் இருட்டறையின் மூத்திர நெடியோடு கலந்த ரத்த, சீழ் நாற்றம்தான்.

நாவலின் இரண்டாம் பாகத்தின் துவக்கத்திலிருந்தே அரச வன்முறை இல்லாத பக்கமே இல்லை. அதிரடிப்படையினரிடம் சிக்கிய ஒவ்வொரு பழங்குடி ஆணும் அவர்கள் பார்வையில் வீரப்பனுக்கு அரிசியும், உணவுப்பொருட்களும் கடத்திப்போய் கொடுத்தவர்கள், அவர்கள் வீரப்பனை பார்த்ததாக பொய்யாவது சொல்லும் வரை அடி, உதை தான். பெருவிரலை திருப்பி மடக்கி மெல்லிய இரும்பு கம்பியால் கையோடு சேர்த்துக் கட்டுவது ஒரு வகை விசாரணை முறை, இதனால், அந்த நபர் இனி ஒரு நாளும் தன் கையால் எந்த பொருளையும் தூக்க முடியாது. காவலர்கள் இதற்கு தரும் விளக்கமோ, “இனி அவர்களால் துப்பாக்கியே தூக்க முடியாது”.

அதேபோல அதிரடிப்படை கைது செய்த ஒவ்வொரு பழங்குடி பெண்ணும் வீரப்பனுடன் பாலியல் உறவு கொண்டவர்கள் என்ற நோக்கிலேயே விசாரணை இருக்கிறது. வீரப்பனுடன் உறவு கொண்டவர்கள் எங்களுடன் உறவு கொள்ள மாட்டீர்களா என்ற உப கேள்வியும் உண்டு. விசாரணை அறையில் பிறந்த குழந்தை வீரப்பனுக்கு பிறந்ததாய் கேலி பேசப்பட்டு முழுநாள் கூட உயிர்வாழ முடியாத நிலையை அடைகிறது. அதிரடிப்படை முகாமில் அடைபட்டிருக்கும் ஒவ்வொரு பெண்ணும் வன்புணர்ச்சி செய்யப்படுகிறார்கள், வயது வித்தியாசமெல்லாம் இல்லை.

அவர்களின் விசாரணை முறையில் பால் பேதம் கிடையாது, வயது பேதம் கிடையாது. காது மடல்களிலும், மார்பு காம்புகளிலும், பிறப்புறுப்புகளிலும் மின்சாரம் பாய்ச்சுவது. தலைகீழாக தொங்கவிடுவது, வலியை தாங்க முடியாமல் மலம் கழித்து விடுபவர்களை, அதை அருந்தச் செய்வது என்று உடல் ரீதியில் சிதைக்கும் வேலை ஒரு புறம் என்றால்.

தந்தையை மகனும், மகனை தந்தையும் லத்தியாலும், செருப்பாலும் அடிப்பதும், சிறுவயதுப் பெண்ணை நிர்வானப்படுத்தி, சங்கிலியிட்டு நிற்க வைத்து ஆண், பெண் என எல்லாக் கைதிகளையும் அவளைப் பார்க்கச் சொல்வது என மனரீதியாக சிதைவை உண்டாக்குவது மறுபுறம். இத்தகைய உடல்ரீதியான, மனரீதியான தாக்குதல்களோடு பாலியல் ரீதியான தாக்குதல்களை வன்முறை என்பதைவிட காட்டுமிராண்டித் தனமான வன்முறை என்றுதான் சொல்ல முடியும், தாயின் கண்ணெதிரில் மகளை, மகளின் எதிரில் தாயை, கணவனின் முன்னே மனைவியை, கர்ப்பினியை கூட்டாக புணர்வது என்பதையெல்லாம் எப்படி நியாயப்படுத்த முடியும்?

இப்படிப்பட்ட கொடூரமான விசாரணை முறைகளை கதை கதையாய் சொல்லும் இந்த அத்தியாயங்களை மனம் கனக்காமல் யாராலும் கடந்து சென்று விடமுடியாது. ஒருவரின் உடலையும், மனதையும் சிதைக்க எப்படி ஒருவரால் முடிகிறது, அதுவும் குதூகலத்தோடு? நான்கு பேரை உள்ளே அறைக்குள் அடைத்து வைத்து வதைப்பதன் மூலம் எதைச் சாதித்துவிட முடியும், அதிலும் ஒன்றும் தெரியாத சில அப்பாவிகளை? படித்த ஆசிரியர்களையும், நாகரிக மனிதர்களையுமே ஊடகங்களின் கண் முன்னே தாக்கத் துணிகிற அதிகாரம் கொண்ட காவல்துறை. படிப்பறிவற்ற, நம்மால் சொல்லிக் கொள்ளப்படும் நாகரிகமற்ற பழங்குடிகளின் மீது எத்தனை வெறியாட்டம் ஆடியிருக்கும் என்பதற்கான ஆவனம் இந்த சோளகர் தொட்டி.

காட்டோடும், இயற்கையோடும் தங்களைப் பினைத்துக்கொண்டிருக்கும் இந்தப் பழங்குடிகளின் கலாச்சாரத்தை நாம் அறியாமலே இவர்களை காட்டு மிராண்டிகளாகவும், நரமாமிசம் உண்பவர்களாகவும் சித்தரித்து வருகிறோம். சீருடை அணிந்தவர்கள் நரவேட்டையாடியது இவர்களைத் தான். ஒரு கரடியோ, மானோ எதுவானாலும் தொட்டியிலுள்ள அத்தனை பேரும் பகிர்ந்து உண்ணும் இவர்களது காட்டுமிராண்டி கலாச்சாரத்தை நாம் புரிந்து கொள்ளப் போவதில்லை. இந்தப் பழங்குடிகள், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் இத்தனை கொடுமைகளை அனுபவித்த போதும் யாரும் தற்கொலைக்கு முயல்வதில்லை. கதையின் முக்கிய பாத்திரம் சிறையிலிருந்து தப்பிய பிறகு இனி அதிரடிப்படையினரிடம் சிக்கினால் தான் பலியிடப்படுவது உறுதி என்றான பிறகு, தொட்டிக்குச் செல்லமுடியாத நிலையிலும் தற்கொலை செய்வதில்லை, எதிர்த்து நின்று எவரையும் கொல்வதுமில்லை. தேவைக்கு அதிகமாக வேட்டையாடுவதையே எதிர்க்கிறார்கள். நாவல் முழுக்க எந்த சோளகனும் ஒருவனை கொல்லத் துணிவதே இல்லை, அவன் தன்னுடைய நிலத்தையே அபகரித்த போதும். ஒரே ஒரு இடத்தில் ஒருவன் இத்தனை அவமானங்களுக்குப் பிறகு தன் மனைவியைத் தற்கொலை செய்து கொள்ளும் படி ஆத்திரத்தில் கத்துகிறான், அதுவும் நடைபெறுவதில்லை. கொலையோ தற்கொலையோ எதுவுமில்லாத வாழ்க்கை முறை அவர்களுடய காட்டுமிராண்டி வாழ்க்கை முறை.

நாவலின் ஒரேயொரு குறையாக நான் காண்பது, மொழிநடை. பல இடங்களில் செய்தி வாசிப்புத் தொனி என்றாலும், துயர காவியத்துக்கு மொழி நடையெல்லாம் தடை இல்லை. வட்டார வழக்கில் அமைந்திருக்கலாம். சதாசிவம் விசாரணை ஆனையத்தின் முன் சாட்சி கூறிய இத்தகைய மனிதர்களின் கதையைத் தான், மனித உரிமை ஆர்வலரான ச.பாலமுருகன் சோளகர் தொட்டி என்கிற இந்த இலக்கியப் படைப்பாகத் தந்திருக்கிறார். இலக்கியம் சாதாரன மனிதனையேப் பாடுகிறது. விசாரனை ஆனையம் அதிகாரத்தின் பக்கம் நின்று வரலாற்றை பதிவு செய்தது. (அது பதிவு செய்த விதம் இது) வரலாறு எப்போதுமே வென்றவர்களால் எழுதப்படும் என்பது தான் வரலாறு, அது சாதரனனைப் பாடுவதே இல்லை.

இத்தகைய பழங்குடிகளைத்தான் தண்டகாருன்யாவிலிருந்து இடம்பெயர வற்புறுத்தி அதிகார வர்க்கம் முகாமிட்டிருக்கிறது. Armed Forces Special Power Act, போன்ற மனித தன்மையற்ற சட்டங்களைக் கொண்டிருக்கும் வடகிழக்கு மாநிலங்களிலும், ராணுவத்தின் விசாரணை முறைகள் இதை ஒத்ததாகவே இருப்பதால் தானே, சில மணிப்பூர் பெண்கள் நிர்வானமாக திரண்டு தங்களை கற்பழிக்குமாறு அரச வன்முறைக்கு எதிராக போராடினார்கள், பத்தாண்டுகளாகவே உண்ணாவிரதம் இருந்துவரும் ஐரோம் சர்மிளாவும் அதே அரச வன்முறையைத்தான் எதிர்த்துதானே போராடி வருகிறார். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகுதான் இது போன்ற மனிதத் தன்மைக்கு விரோதமான சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டுவருகிறது.

வீரப்பனைக் கொன்று மன்னில் புதைத்தாகிவிட்டது. காவலர்கள் பதக்கங்களோடு தங்கள் பொழுதை ஓய்வாய் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். தொட்டியில் கொத்தல்லி சீரழிந்து போன தங்களையும் தங்கள் வாழ்விடத்தையும் பற்றி பொட்டிப் பொடுசுகளோடு துயரத்தோடு காட்டை நோக்கிக் கொண்டிருப்பார்.



AFSPAஅரச பயங்கரவாதம்காவல் துறைசோளகர்புத்தகம்வீரப்பன் Share Tweet +1
Creative Commons Licence
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License