கவிதை வானத்தை மூடி மறைக்க முயலும்
ரேடார்களையும் ஏவுகணைகளையும் மீறி
உலகெங்கும் சொல் தொடர்ந்து பறக்கும்
எந்த ஒரு விமான தளத்திலும் அது வந்து
இறங்குவதை தடை செய்ய முடியாது, தடுக்க முடியாது
ஏனெனில் சொல் என்பது ஒரு பறவை
நுழைவுச் சீட்டுத் தேவையில்லை அதற்கு
~ நபில் ஜனாபி
(ஈராக்கைச் சேர்ந்த கவிஞர். மேலே உள்ள கவிதையை குர்திஸ்தான் சுதந்திர தினத்தன்று அவ்விழாவில் பாடியதற்காகவும், அவ்விழாவில் கலந்து கொண்டதற்காகவும் தன் நாட்டு ராணுவத்தால் கைது செய்யப்பட்டவர்.)
அணுகுண்டோ ஒரு முறைதான் வெடிக்கும்; புத்தகங்களோ திறக்கும் போதெல்லாம் வெடிக்கும் தன்மையுடையது. என்பது யாரோ எப்போதோ சொன்னது. எல்லா புத்தகங்களும் இப்படி திறக்கும் போதெல்லாம் வெடிப்பவையல்ல, சில புத்தகங்கள் அப்படிப்பட்டவை. அப்படி திறக்கும் போதெல்லாம் வெடிக்கக்கூடிய புத்தகங்களிலொன்று என் கைகளில் இப்போது இருக்கிறது. அது, மண்ணும் சொல்லும் – மூன்றாம் உலகக் கவிதைகள். எஸ்.வி.ராஜதுரையும், வ.கீதாவும் தொகுத்து தமிழில் மொழிபெயர்த்த பல கவிதைகள் அடங்கிய புத்தகம்.
மூன்றாம் உலகக் கவிதைகள் என்றதுமே, இந்நூல் எத்தகைய கவிதைகளைக் கொண்டது என்பது புரிந்திருக்கும். இக்கவிதைகள், அடக்குமுறைக்கெதிரான கவிதைகளையும், அடிமைத்தனத்தின் கீழான நிலையையும், அதை எதிர்க்கும் வல்லமையையும், சமூக நீதிக்கான போராட்டங்களையும் உரக்க எதிரொலிக்கும் எதிர்ப்பின் கவிதைகள்.
எதிர்ப்பைப் பற்றிய கவிதைகள் எதிர்ப்பைக் காட்டிலும் ஒரு படி மேலானதாக இருக்க வேண்டும். என்ற மஹ்மூத் தார்விஷின் வார்த்தைகளுக்கு ஏற்ப இந்நூலின் கவிதைகள் அமைந்திருக்கின்றன. அத்தகைய கவிதைகள் மட்டுமே தொகுக்கப்பட்டிருக்கின்றன. போராளிகள், புரட்சியாளர்கள், சிறைக் கைதிகள், கவிஞர்கள், கலைஞர்கள் என்று பலதரப்பட்டவர்களுடைய கவிதைகள். ஆகத் தெரிந்த சே குவேரா முதல் பெயர் தெரியாத அடக்குமுறைக்கு எதிராக தன் சொற்களை உதித்த சிறைக்கைதிகள் வரை எல்லோருடைய எதிர்ப்பின் சொற்களும் கவிதைகளாக இந்நூல் முழுதும் கொட்டிக் கிடக்கிறது.
கவிதையின் சிறப்பு அதன் இலக்கணத்தையும், அமைப்பையும் விட அதன் பொருளில் தான் இருக்கிறது, அதன் தீவிரத்தில் தான் இருக்கிறது (என்னுடையவை அப்படிப்பட்டவையல்ல, அவை கவிதைகளே அல்ல) என்ற என்னுடைய கருத்தாக்கத்துக்கு நெருங்கி வரும் கவிதைகள் பலவும் சொற்களாய், அம்மண்ணையும், அம்மண்ணின் வரலாற்றையும் சொல்கிறது.
இடஒதுக்கீடுக்கெதிராய் குறுக்குக் கயிறு போட்டு குறுக்கே நின்ற பார்ப்பனர்களையும், அந்தப் பார்ப்பனீயத்தில் திளைத்தவர்களையும் எதிர்த்த ஒரு போராளியின் கவிதையும் இந்நூலில் இருக்கிறது. (அக்கவிதையை எழுதியவர் வரவர ராவ்)
அம்மா,
என் முடியை வளர விடு,
அதை வெட்டாதே
கிளைகள்
வெட்டப்பட்ட மரம்
பாடும் பறவைகளுக்கு உகந்தது அல்ல
என்று ஆஃப்காணிஸ்தானின் பழங்குடிகளிடம் பாடப்பட்டுவரும், பெண்ணியக் கவிதையும் இந்நூலில் இருக்கிறது.
ஏலாரான் – துட்டகமுனு சண்டை!
துட்டகமுனுவுக்கு வெற்றிக்கு மேல் வெற்றி
ஒரு யானையின் முதுகில் ஏலாரனின் பிணம்
அந்தக் கைத்தட்டலை நிறுத்து
அந்தக் கைத்தட்டலை நிறுத்து
அந்தக் கைத்தட்டலை நிறுத்து
கைத்தட்டுதல் நாசமாய் போக!
அந்த பெயருக்கு
ஒரே… ஒரு … கண்ணீர் துளியை
வழங்கப் போவது யார்?
அன்று இறந்தவன் நம்மில் ஒருவன்…!
இக்கவிதைக்குச் சொந்தக்காரர், சிங்களரான பராக்ரமு கொடித்துவக்கு.
புர்க்காக்களுக்குள்ளிலிருந்து பெண்ணியக் குரலெழுப்பாமல், அந்தப் புர்க்காக்களைக் கிழித்தெறிந்துவிட்டு குரலெழுப்பும் இஸ்லாமிய பெண்கவிகளின் கவிதைகளும் இருக்கிறது.
இஸ்லாமிய கட்டுப்பெட்டித்தன ஆனாதிக்க அடாவடிக் கோட்பாடுகளைக் கொண்ட அத்தனை புனித நூல்களையும் கேள்விக்குள்ளாகும் சயீதா கஸ்தர் என்னும் பாக்கிஸ்தானிய பெண்ணியப் போராளியின் கவிதையும் இருக்கிறது.
கிஷ்வர் நஹீத், என்னும் இன்னொரு பாக்கிஸ்தானிய பெண் கவியின் குரலோ முந்தையதுக்கு மாறானது ஆனால், தீர்க்கமானது.
ஒரு ஆடுகுதிரையின் மீது
ஒரு குழந்தை ஆடுகிறது
அது மரக் குதிரை
குழந்தையின் ஸ்பரிசம் அறியாதது
குழந்தை குதிரையை அடிக்கிறான்
தனது திறமையைக் கண்டு
தன்னையே மெச்சிக் கொள்கிறான்
அவன் வளர்ந்து பெரியவனாகிறான்
மரக்குதிரையில் மீண்டும் சவாரி செய்கிறான்
ஒரு சடங்கின் மூலம்
தன் இளமையை அறிவிக்கிறான்.
இரவு கழிந்ததும்
குதிரை உரு மாறுகிறது
குதிரையை அடிப்பவன்
தன்னைத் தானே மெச்சிக்கொள்கிறவன்
மாறாமலேயே இருக்கிறான்:
எஜமானனாக
சவாரி செய்பவனாக
கணவனாக
அரபு நாடுகளுக்கிடையே, நல்லுறவை நாடும் கவிதைகள், நாஜிக்களின் முகாம்களிலிருந்து சவப்பெட்டியினுள் பினத்தோடு தப்பித்த ஒரு யூதனின் கவிதை, அந்த நாஜிக்கூடங்களிலிருந்து தப்பித்து, மதத்தின் பெயரால், மதத்தின் புனிதப் பெயரால் வேலி முகாம்களுக்குள் அடைக்கப்பட்ட “பசி கொண்ட பாலஸ்தீனியக் கவி“யின் கவிதை ஒன்று,
நான் பசியால் துடிக்கும் போது
எனது மண்னை அபகரித்தவர்களின் சதையை
விழுங்குபவன் நான்
அச்சம் கொள்
எனது பசியைக் கண்டு.
நிற வெறிக்கெதிராய் போராடிய கறுப்பு பேனாக்கள் கவி வடிக்கின்றன.
வெள்ளை நிறமோ விசேட நாட்களுக்குரியது
கறுப்பு நிறமோ ஒவ்வொரு நாளுக்கும்
சொற்கள் ஏ.கே 47களாக வேண்டும்
சொற்கள் எப்போதும் போரட வேண்டும்
நடு இரவில் திரும்பி பார்க்காமல் விட்டுப்போன, புத்தனின் மனைவி யசோதராவைக் கேட்கும் பெண் கவிகளும், மரியத்தையும், பாத்திமாவையும் கேள்வி கேட்கும் பெண் கவிகள், முந்தைய சகோதர தேசமும், இன்றைய எதிரி தேசங்களுமான அண்டை நாடுகளைச் சேர்ந்த இவர்கள் இருவரும் ஒன்றைப் போலவே கேட்கிறார்கள் கேள்விகளாய், ஆணாதிக்கவாதிகளை. அது புத்தனாக இருந்தாலும் சரி நபியாக இருந்தாலும் சரி…
இன்றைய இந்துத்துவ சோதனைக் களத்தின் மைந்தன் ஒருவனுடைய “ஆர்யகுமாரனனின் பிரேதப் பரிசோதனைக்” கவிதை பாடிச் செல்கிறது இப்படி,
அவனது
தோலை உரித்த போது
தங்கத் தகடு ஒன்றும் கிடைக்க வில்லை…
அவனது
பெரும் தொப்பையிலிருந்து
நவமணிகளை எதுவும் எடுக்கவில்லை…
(வாழ்நாள் முழுதும் அவன் இவற்றை உண்டதாகச் சொல்லப்பட்ட போதும்)
அவனது
நஞ்சேறிய இதயத்தில்
புணிதச் செயல்கள் ஈட்டிய அமுதத்தைக் காண முடியவில்லை…
ஓர் ஓநாயின் அழகான இதயமே
சூலம் போன்ற கோரைப் பற்கள்
அழகிய கண்களில் முதலைக் கண்ணீர்
ஆசார நாளங்களில் உறைந்து போன சாரயம்
ஆம்
இதுதான்
பாடம் போட்டு வைக்கப்பட்ட
ஓர் ஆரிய குமாரனனின் பிரேத பரிசோதனை அறிக்கை
(நீரவ் பட்டேலுடைய கவிதையின் சுருக்க வடிவம்)
இப்படி நூல் முழுக்க, மஹ்மூத் தார்விஷின் வரிகளின் படியமைந்த கவிதைகளே, அந்த மண்ணையும், மக்களையும் சொற்களாய் விவரிக்கின்றன…
இந்நூலின் ஒரு குறையாக நான் காண்பது, கவிதைகளுக்கெண் கொடுத்து பட்டியலிடாமலும், பொருளடக்கம் இல்லாமல் இருப்பதும் தான்.
நூல் : மண்ணும் சொல்லும் மூன்றாம் உலக கவிதைகள்
வகை : கவிதைத் தொகுப்பு
தமிழாக்கம் : எஸ்.வி.ராஜதுரை & வ.கீதா
விலை : ரூ.115
பதிப்பகம் : அடையாளம்</div>

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License