ஸ்கூப் – வரலாற்றுப் பின்னணியின் பின்னணி
“அப்பாவோட புத்தகங்களுக்கு வர ராயல்டிய வச்சு இங்கிலாந்தில் குடும்பத்தை ஓட்ட முடியுமா? நான் அங்க போயிடலாமான்னு யோசிக்கிறேன்” இப்படி ஒரு பெண்மனி கேட்டிருக்கிறார், அவர் கேட்ட படி தன் தந்தையின் புத்தகங்களின் ராயல்டியை நம்பி அவர் இங்கிலாந்துக்குச் சென்றிருந்தால், இந்திய ஜனநாயகத்துக்கு ஒரு களங்கம் வராமல் இருந்திருக்கலாம், இந்திய வரலாறு கொஞ்சம் திசை மாறியிருக்கும்.
“பாக்கிஸ்தான் கட்டாயம் இருபத்தைந்து ஆண்டுகளுக்குள் உடைந்துவிடும்” என்று அப்போதே நான் கூறினேன் என்று டாம்பீக தாத்தாச்சாரியர் ஒருவர் பெருமையடித்திருக்கிறார். அவர் கூறியது அவர் உதவியாளருக்குக் கூட தெரியாது என்பது தான் வேடிக்கை.
இதைப் போன்ற தகவல்களும், ஒரு பத்திரிக்கையாளன் எப்படி எப்படியெல்லாம் தன்னுடைய சோர்ஸ்களைப் பயண்படுத்திக்கொள்வான், அவர்களை எவ்வாறு காப்பாற்றுவான் என்பதையும் விளக்கும் கதைகளும் ஏராளமாய் இந்நூலில் கொட்டிக் கிடக்கிறது.
இதெல்லாம் குல்தீப் நய்யாரினுடைய ஸ்கூப் நூலில் தான்.
லொயோலாவில் படித்த காலத்தில் ஓசியில் வந்த டெக்கன் க்ரோனிக்களில் ஆங்கில ஸ்கூப் நூலின் விமர்சனம் வந்தபோது, அதை ஓரமாக ஒதுக்கித் தள்ளிவிட்டேன். இப்போதுதான் இந்நூலை தமிழில் வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது, எடுத்த மூன்று மணிநேரத்தில் முழுதாய் படித்து விட்டேன். அந்தளவுக்கு விறுவிறுப்பான நடை, (மொழிபெயர்ப்பிலும் கூட) அதே சமயம் ஆஃப் த ரெக்கார்ட்டாக நடந்த விஷயங்களைப் படிக்க யாருக்குத்தான் கசக்கும்?
எமர்ஜென்சிக் காலத்தில், நடந்த விஷயங்களும், அந்த எமர்ஜென்சியிலும் ஒரு சோர்ஸின் மூலமாய் கிடைத்த தகவலையும் ஸ்கூப் செய்தே தீருவேன் என்று 11மணிவரை பொறுத்து அதற்குப் பிறகு அச்சுக்கு அனுப்பும் சாமர்த்தியமும், கமல்நாத்திடம் கொக்கி போட்டு தகவலை வாங்கிய சாமர்த்தியமும், எச்.ஆர்.கன்னா விசாரணைக் கமிஷன் அறிக்கையை அசோக் சென்னிடம் வாங்கி, தனக்கு கொடுக்கப்பட்ட காலக் கெடுவுக்குள் படிக்க முடியாது என்பதால், அதை பக்கம் பக்கமாக பிரித்து தட்டச்சு செய்து விட்டு, அறிக்கையை அசோக் சென்னிடம் தந்துவிட்டு, தன்னுடைய நகல் அறிக்கையை அரசுக்குப் போட்டியாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வைத்தது என்று மனிதர் அந்தக் காலத்திலேயே செமையான ஆட்டம் போட்டிருக்கிறார்.
பாக்கிஸ்தான் அணுவிஞ்ஞானி ஏ.க்யூ கானுடனான சந்திப்பை குல்தீப் பயண்படுத்திக் கொண்டதாக நினைக்க, குல்தீப்பை பாக்கிஸ்தான் பயண்படுத்திக் கொண்டது ஒரு திருப்பு முனை, அப்போதும் குல்தீப் தோற்காமல், கானிடமிருந்து வரையறுக்கப்பட்ட எல்லையையும் தாண்டி, நோண்டி எடுத்ததில் குல்தீப்புக்கு வெற்றியே. அதேபோல, இந்திரா காந்தியின் காலத்தில் இரும்பாலை அமைக்கும் இடத்தைப் பற்றி குல்தீப் ஸ்கூப் செய்ய, அது ஒட்டு மொத்தமாய் சொதப்பிவிட, மண்ணிப்பு கேட்குமளவிற்கு குல்தீப் மண்ணைக் கவ்வ, அதற்கடுத்து, அந்த குல்தீப்பே அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்டதைப் போல எழுதியிருக்கிறாரே என்று இந்திரா கூறுமளவுக்கு மீண்டும் மீண்டும் ஸ்கூப்புக்காக அலைந்திருக்கிறார். இப்புத்தகத்துக்கு ஸ்கூப் என்று பெயர் வைக்காமல் இருந்திருந்தால், என்னய்யா இந்த ஆள் இப்படி ஸ்கூப் ஸ்கூப் என்று இழுத்திருத்திருக்கிறாரே என்று சொல்லுமளவுக்கு ஒரே ஸ்கூப் மழை.
நாற்பதாண்டு பழைய செய்தியில் என்ன முக்கியத்துவம் இருந்துவிடப் போகிறது என்ற அலட்சியத்தோடு படிக்க ஆரம்பித்தால், அந்தச் செய்தியின் பின்னணியில் நின்று அந்தச் செய்தியை முன்னால் கொண்டு வர இவர் பட்ட பாடுகளோடு படிக்கும் போது நாற்பதாண்டு செய்திகளின் பின்னாலிருக்கும் உழைப்பும் நம் கண்முன்னால் படுகிறது. நிச்சயமாய் வரலாற்றின் பின்னணியைப் பற்றிய பின்னணித் தகவல்களை அளிக்கும் அருமையான நூல் தொகுப்பு இது.
அதேபோல, ஒரு பெருங்கட்டுரையைச் சுருக்கி எழுதும் கலையில் குல்தீப் அடித்து விளையாடுகிறார். காந்தி இறந்த போது அவர் எழுதியக் கட்டுரையின் சுருக்கத்தையும், இன்னும் இரு இடங்களிலும் சில கட்டுரைகளின் சுருக்கத்தை தந்திருக்கிறார், மொத்தக் கட்டுரையின் தகவலை இரு பத்திகளில் சுருக்கும் இக்கலை, உண்மையிலேயே பெரிய விஷயம்.
இந்நூலிற்கு குல்தீப் எழுதியிருக்கும் முன்னுரையிலிருந்து சில பகுதிகளை இறுதியாகத் தருகிறேன்.
“ஆள்பவர்களையும், மக்களையும் நேரடியாக இணைக்கும் புதிய தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. தொலைக்காட்சியும் இணையமும் இப்போது இதைச் சாத்தியமாக்கிவிட்டன. சாதாரண மக்களுக்கு அவர்கள் ஆட்சியாளர்கள் எப்படிப் பட்டவர்கள் என்பதைச் சொல்ல ஒரு அரசியல் செய்தியாளர் தேவையில்லை. தொலைக் காட்சியைப் பார்த்தே அவர்கள் ஒரு முடிவுக்கு வந்துவிட முடியும். எழுத்தின் மூலம்தான் அறிந்து கொள்ள வேண்டுமென நினைப்பவர்களும், அதற்கு ஒரு அரசியல் செய்தியாளனைத் தான் எதிர்பார்த்திருக்க வேண்டுமென்பதில்லை, இணையத்தில் நிறைந்து கிடக்கும் வலைப்பதிவுகளில் எழுதுபவர்கள் செய்தி, ஆய்வு எல்லாவற்றையும் தருகிறார்கள். சில சமயங்களில் சில பெரிய செய்திப்பத்திரிக்கைகளின் ஆசிரியர்களை விட இவர்கள் விஷயம் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள்.
செய்தித் தாள்களின் காலம் முடிந்துவிட்டது என்று இதற்கு அர்த்தமில்லை. போட்டி கடுமையாயிருக்கிறது அவ்வளவுதான். இறுதி வெற்றி செய்தித் தாளுக்கோ, தொலைக்காட்சிக்கோ, வானொலிக்கொ, இணையத்திற்கோ இருக்கலாம். ஆனால், யார் ஸ்கூப் செய்கிறார்களோ அவர்களுக்குத் தான் மரியாதை” என்று இவர் திறமையை மட்டுமே மதிக்கிறார், பதிவர்களிடம் எலக்கியத்திறமை இல்லை, வாசிங்டனில், சிட்னியில், அமைந்தகரையில், அயனாவரத்தில் கூட என்னுடையதைப் போல வந்ததில்லை, அதனால் என்னுடையதுதான் உசத்தி என்று பேத்தவில்லை. ஸ்கூப்புக்கு வணக்கம்.</div>

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License